வாரிசு, துணிவு படங்களுக்கு 10 மடங்கு டிக்கெட் விலை உயர்வு

 
varisu thunivu

பொங்கலுக்கு ரிலீசாகும் வாரிசு, துணிவு படங்களுக்கு அரசு நிர்ணயித்தைவிட 10 மடங்கு அதிக தொகைக்கு டிக்கெட் விற்கப்பட்டாலும் தியேட்டர்களின் அத்து மீறல்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. 

varisu vs thunivu

மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் குறைந்தபட்சம் 50 ரூபாய்க்கும் அதிகபட்சம் 150 ரூபாய்க்கும் டிக்கெட் விற்கப்பட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஏசி தியேட்டர்களில் குறைந்தபட்சம் 40 ரூபாயாகவும் அதிகபட்சம் 100 ரூபாயாகவும் இருக்க வேண்டும். ஏசி இல்லாத தியேட்டர்களில் முறையே 30 மற்றும் 80 ரூபாய் ஆகும். கிராம பஞ்சாயத்து பகுதிகளில் ஏசி தியேட்டர்களில் அதிகபட்சம் 75 ரூபாய். ஏசி அல்லாத தியேட்டர்களில் அதிகபட்சம் 50 ரூபாய். ஆனால் இப்போது இஷ்டம் போல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆன்லைன் டிக்கெட் களும் காம்போ ஆஃபர் உள்ளிட்ட பெயர்களில் இரட்டிப்பு விலைக்கு விற்கப்படுகின்றன.

அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு ஜிஎஸ்டி சேர்த்தாலும் கூட 200 ரூபாய்க்கு மேல் அதிகபட்சமாக வசூலிக்க சட்டத்தில் இடமில்லை. ஆனால் சில பெரிய நடிகர்களின் படங்களுக்கு முதல் சில நாட்களுக்கு ஆன்லைன் டிக்கெட்கள் முடக்கப்படுகின்றன. சில காட்சிகளுக்கான மொத்த டிக்கெட்களை ரசிகர் மன்றத்தினரே வாங்கி ஒரு டிக்கெட்டை 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விற்கின்றனர். சில தியேட்டர்களில் ஆன்லைன் புக்கிங் டிக்கெட்களை தியேட்டர் நிர்வாகமே ஆட்களை வைத்து ரசிகர்களிடம் 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை பிளாக்கில் விற்கும் முறைகேடும் நடக்கிறது. இந்தப் பொங்கலுக்கு நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இவ்விரு படங்களுக்கு ஆன்லைன் புக்கிங் ஏற்கனவே துவங்கிய நிலையில் முதல் நாள் சிறப்பு காட்சிகள் உட்பட சில நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கான டிக்கெட்களும் முடக்கப்பட்டுள்ளன. மொத்தமாக புக்கிங் செய்யப்பட்டு ஒவ்வொரு டிக்கெட்டும் 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை பிளாக்கில் ரசிகர்களால் விற்கப்படுகின்றன. 

thunivu and varisu

அதிலும் ரசிகர் மன்ற காட்சிகள் என்ற பெயரில் முதல் காட்சிக்கான டிக்கெட் 2000 ரூபாய் வரை பிளாக்கில் விற்கப்படுகிறது. தமிழ்நாடு சினிமா விதிகளின்படி ரசிகர் மன்ற காட்சி என்ற பெயரில் காட்சிகளை வெளியிடுவதற்கு சட்டத்திலேயே இடம் இல்லை என்று நுகர்வோர் அமைப்பினர் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் இச்சிறப்பு காட்சிகளை தமிழக அரசு அனுமதித்து வருகிறது. தியேட்டர்களில் நடக்கும் விதிமீறல் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.