வாரிசு தரமான படம்; தியேட்டர்லேயே கண்டிப்பா 100 நாள் ஓடும்- நடிகர் சரத்குமார்

 
சரத்குமார்

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. தமன் இசையமைத்திருந்த இப்படத்தை தில்ராஜு தயாரித்திருந்தார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான வாரிசு வசூல் மற்றும் விமர்சன ரீதியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. 

இந்நிலையில் இன்று சென்னையில் வாரிசு படக்குழுவினர் அனைவரும் ஊடகத்தை சந்தித்து அதன்வாயிலாக மக்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷ்யாம், சம்யுக்தா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோருடன் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர்கள் தில் ராஜூ, சிரிஷ், இசையமைப்பாளர் தமன், ஆகியோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், “தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று எந்த மொழி பேசினாலும் நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள். தமிழ், தெலுங்கு என்றெல்லாம் பார்த்துவிட்டு இருந்தோம் என்றால் இந்தியா ஒன்றாக இருக்காது. ரஞ்சிதமே பாட்டுல மூச்சு வாங்குச்சா இல்லையானே தெரியலை,விஜய் ஆடிக்கிட்டே இருக்காரு. வாரிசு தரமான படம். தியேட்டர்லயே கண்டிப்பா 100 நாள் ஓடும். தரமான படத்திற்கு அழகாக ரிவ்யூ எழுதுங்கள். ரசிகர்களே படத்தை பார்த்து முடிவு செய்து கொள்ளட்டும். உங்களின் கருத்துக்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள்” என்றார். 

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “சூப்பர் ஸ்டார் என்பது வெறும் டைட்டில் அவ்வளவுதான், சூப்பர் ஸ்டாரான எல்லாரும் சூப்பர் ஸ்டார் தான். பட்டத்தை பார்க்காதீர்கள். மனிதனை பாருங்கள். ” என்றார்.