நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு இன்று பிறந்தநாள்

 
sj surya

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பண்முக திறமைகளை கொண்ட எஸ்.ஜே.சூர்யாவிற்கு இன்று பிறந்தநாள். 

1966ல் திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிறந்தவர் எஸ்.ஜஸ்டின் செல்வராஜ். சினிமாவுக்காக தனது பெயரை எஸ்.ஜே.சூர்யா என மாற்றிக் கொண்டார். சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்ற எஸ்.ஜே.சூர்யாவுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது கனவு. அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அவருக்கு, இயக்குநர் பாக்கியராஜுடன் உதவியாளராக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து இயக்குநர்கள் வசந்த் மற்றும் சபாபதியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய எஸ்.ஜே சூர்யா, அஜித் நடித்த உல்லாசம் படத்தில் உதவி இயக்குநராக  பயணியாற்றியுள்ளார். 

sj-suriyaa-34

அந்த படத்தின் படப்பிடிப்பு பணியின் போது போது  'வாலி' படத்தின் கதையை சொல்லி, அதை அஜித்தை வைத்து இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த படத்தின் தயாரிப்பாளரை எஸ்.ஜே. சூர்யாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததும் அஜித் தான். சிம்ரன், விவேக் என பலர் நடித்த இந்த படத்தில் ஜோதிகாவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தது எஸ்.ஜே சூர்யா தான்.  வாலி படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம் தன் நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கும்படி எஸ்.ஜே. சூர்யாவை கேட்டுக்கொண்டார். அதன் மூலம் உருவானது தான் குஷி. விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் வந்த இந்தப் படமும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுத்தது. நியூ படத்தின் மூலம் முதல் முதலாக நடிகரானார் எஸ்.ஜே.சூர்யா.  தொடர்ந்து அன்பே ஆருயிரே படத்தையும் இயக்கி, ஹீரோவாக நடித்தார்.

ஹீரோ மட்டுமின்றி வில்லன் கதாப்பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் எஸ்.ஜே.சூர்யா. ஸ்பைடர், மெர்சல் படங்களில் அவரது வில்லன் கேரக்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதேபோல் சமீபத்தில் வெளிவந்த மாநாடு படத்திலும் அவரது வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்தது. இவ்வாறு பண்முக திறமைகளை தமிழ் சினிமாவிற்கு வழங்கி வரும் எஸ்.ஜே.சூர்யா இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.