சென்னை தேவி தியேட்டர் நிரந்தரமாக மூடப்படுகிறதா?

சென்னை அண்ணாசாலையில் கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது தேவி தியேட்டர். தேவி, தேவி பாரடைஸ், தேவிகலா, தேவிபாலா என்று நான்கு அரங்குகள் இதில் உள்ளன.
23.5.1970ல் தொடங்கப்பட்டது தேவி தியேட்டர். அதன்பின்னர்5.7.1970ல் தேவி பாரடைஸ் தொடங்கப்பட்டது. பின்னர் 12.8.1071ல் தேவி பாலா, 21.11.1974ல் தேவி கலா அரங்கு தொடங்கப்பட்டது.
கடந்த ஆண்டு பொன்விழாவினை கொண்டாடியது தேவி தியேட்டர். கொரோனா ஊரடங்கினால் தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கிறது. ஆனால், தேவி தியேட்டர் வளாகம் நிரந்தரமாக மூடப்படுகிறது என்று செய்தி வெளியானது.
கொரோனா முதல் அலையில் சிக்கி மெல்ல இயங்க ஆரம்பித்த சினிமா தியேட்டர்கள் தற்போது இரண்டாவது அலையில் சிக்கி தவிக்கின்றன. இந்த நிலையில் இந்த செய்தி வெளிவந்ததால் பலரும் உண்மை என்றே நம்ப ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால், இந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்த தேவி தியேட்டர் நிர்வாகம், அவசர அவசரமாக மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அதில், ‘’கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஒரு வருடமாக மருத்துவ துறையின் வழிகாட்டுதல் அடிப்படையில் தியேட்டர் வளாகத்தை கிருமி நாசினி கொண்டுசுத்தப்படுத்தி வருகிறோம். ரசிகர்களும் இதை அறிந்துகொள்ளும் வகையில் இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டோம். அதனால், சுத்தம் செய்வதை இழுத்து மூடுவதாக தவறான செய்தி பரவி இருக்கிறது.
தேவி தியேட்டரை நிரந்தரமாக மூடப்போவதாக, திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் சொன்னதாகவும், செய்தி வெளிவந்திருக்கிறது. அந்த செய்தி தவறானது. செய்தி வெளியிட்ட நாளிதஸ் மறுப்பு தெரிவிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


