ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை!

 

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை!

ஆளும் அதிமுக அரசின் பதவிகாலம் மே 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழகத்தின் பிரதான கட்சிகள் தீவிர பரப்புரை, கூட்டணி ,தொகுதி பங்கீடு என மும்முரம் காட்டி வருகின்றன. அதேசமயம் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கிய நிலையில் விவசாய பயிர் கடன் ரத்து உள்ளிட்ட பல அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதேபோல் கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரின் விவாதங்களின் போது முதல்வர் பழனிசாமி 110 விதியின் கீழ் பேசியபோது, 9 ,10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து மற்றும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை!

இந்த அறிவிப்புகள் எல்லாம் தேர்தலுக்கானவை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. ஆளும் அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் இது என்பதால் நிறைவு நாளான இன்று முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.அதில் 5 ஆண்டுகாலம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி அமைய உறுதுணையாக இருந்த துணை முதல்வர் , அமைச்சர்கள், சபாநாயகர், அரசு உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் ,துறை செயலர்கள் என அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.அத்துடன் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மரியாதை!

இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினர். அவர்களுடன் அமைச்சர்களும் உடனிருந்தனர்.