தொற்றிக் கொண்ட கொரோனா… உயிர் போய்விடுமோ என்று அச்சம்… உயிரை மாய்த்துக் கொண்ட உளவு பிரிவு அதிகாரி!- சென்னையில் அதிர்ச்சி

 

தொற்றிக் கொண்ட கொரோனா… உயிர் போய்விடுமோ என்று அச்சம்… உயிரை மாய்த்துக் கொண்ட உளவு பிரிவு அதிகாரி!- சென்னையில் அதிர்ச்சி

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, உயிர் போய்விடுமோ என்ற அச்சத்தில் சென்னை வருமான வரித்துறையில் உளவு பிரிவில் பணியாற்றி வந்த அதிகாரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 6-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மணிகண்ணன் (54). இவரது மனைவி கலா. மணிகண்ணன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதி, கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள வருமானவரி அலுவலகத்தில் மூத்த நுண்ணறிவு (உளவு) பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்தார். திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்ட மணிகண்ணனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார் மணிகண்ணன். இந்தநிலையில், நேற்று காலை அதேப்பகுதியில் 5-வது தெருவில் உள்ள தனது மற்றொறு வீட்டிற்கு சென்றுள்ளார் மணிகண்ணன். வெகுநேரமாகியும் மணிகண்ணனை காணாததால் அவரது உறவினர்கள் 5-வது தெருவில் உள்ள வீட்டிற்கு தேடி சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் கதவை அவர்கள் வெகுநேரமாக தட்டினர். கதவு திறக்காததால், சந்தேகம் அடைந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மணிகண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, மணிகண்ணன் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று காவல்துறையினரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில், ‘எனக்கு வாழ பிடிக்கவில்லை. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என எழுதப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மத்திய அரசு அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.