சிவசங்கர் பாபாவுக்கு தொடரும் சிறைவாசம்; ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு!

 

சிவசங்கர் பாபாவுக்கு தொடரும் சிறைவாசம்; ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமீன் மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி டெல்லியில் சிவசங்கர் பாபாவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். அவர் மீது 3 போக்சோ வழக்குகளின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டனர். அதில், 2 வழக்குகளில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்திருந்தார்.

சிவசங்கர் பாபாவுக்கு தொடரும் சிறைவாசம்; ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு!

அவரது மனுவில், கேளம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றும் ஆன்மீகம் சார்ந்த தொடர்பு நடத்துவதற்காக மட்டுமே பள்ளிக்கு சென்று வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இரத்த கொதிப்பு, நீரிழிவு, இதயம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்திருந்த 2 மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே, முதல் போக்சோ வழக்கிலும் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.