முன்களப்பணியாளர்களை கவுரப்படுத்தும் “தி சென்னை” இதழ்!

 

முன்களப்பணியாளர்களை கவுரப்படுத்தும் “தி சென்னை” இதழ்!

கொரோனா ஊரடங்கு காலக்கட்டம் தொடங்கிய மார்ச் மாதத்தில் தமிழகம் முழுவதும் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள், காவலர்கள் என அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்தன. தங்களின் உயிரைப் பணயம் வைத்து ஒவ்வொருவரும் வேலையைப்பார்த்துவருகின்றனர். ஊரடங்கில் ஊரே வீட்டுக்குள் முடங்கியிருந்த நேரத்தில் கண்ணுக்கு தெரியாத கோவிட் 19 வைரஸோடு முன்களப்பணியாளர்கள் போரிட்டு வருகின்றனர். முன்களப்பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இத்தகைய முன் களப்பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக சென்னை மாநகராட்சி “தி சென்னை” என்ற இதழை வெளியிட்டுள்ளது. அந்த இதழின் முதல் பதிப்பு இன்று வெளியாகியுள்ளது. கொரோனாவை எதிர்த்து அயராது உழைக்கும் முன்களப்பணியாளர்களுக்கு இந்த இதழ் சமர்ப்பணம் என ட்விட்டரில் பதிவிட்டுள்ள சென்னை மாநகராட்சி “தி சென்னை” இதழின் டிஜிட்டல் பதிப்பையும் இணைத்து வெளியிட்டுள்ளது.