நூற்றுக்கணக்கான ரெட்மி செல்போன்கள்… மதிப்பு 12 கோடி ரூபாய்… லாரி டிரைவரை தாக்கி கொள்ளையடித்து சென்ற கும்பல்

 

நூற்றுக்கணக்கான ரெட்மி செல்போன்கள்… மதிப்பு 12 கோடி ரூபாய்… லாரி டிரைவரை தாக்கி கொள்ளையடித்து சென்ற கும்பல்

தமிழகத்தில் இருந்து லாரி மூலம் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள நூற்றுக்கணக்கான செல்போன்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. சிசிடிவி கேமரா மூலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரம்பத்தூரில் தனியார் செல்போன் தயாரிப்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து நூற்றுக்கணக்கான செல்போன்கள் கண்டெய்னர் லாரி மூலம் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆந்திர மாநில எல்லையில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, லாரியை மர்ம நபர்கள் வழிமறித்துள்ளனர். இதனால் லாரியை டிரைவர் நிறுத்தியுள்ளார். மர்ம நபர்கள், லாரி டிரைவரிடம் சென்று போலி முகவரியை காண்பித்து எவ்வாறு செல்போன்களை எடுத்து செல்கிறீர்கள்? , யார் உங்களுக்கு அனுமதி அளித்தது? என கேட்டுள்ளனர். இதற்கிடையில் மற்றொரு மர்ம நபர் லாரி டிரைவரை துப்பாக்கி முனையில் மடக்கி, அடித்து உதைத்து அவர்களை கண்டெய்னர் லாரியிலிருந்து இறக்கிவிட்டதோடு மட்டுமல்லாமல், செல்போன்கள் ஏற்றி வந்த லாரியை கடத்தி சென்றுள்ளனர். இது குறித்து தாக்கப்பட்ட டிரைவர் செல்போன் நிறுவனத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயமடைந்த டிரைவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, கடத்தப்பட்ட லாரி, சித்தூர் மாவட்டம் நகரி அருகே இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, லாரியை கைப்பற்றிய காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, லாரியில் வைக்கப்பட்டிருந்த 12 கோடி ரூபாய் மதிப்பிலான ரெட்மி செல்போன்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், மற்றொரு லாரியில் செல்போன் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஆந்திர மாநில காவல்துறையினர், தேசிய நெடுஞ்சாலை மற்றும் சுங்கச்சாவடிகளில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லாரியில் கொண்டு செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.