புற்றுநோயாளிகள் கூட கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்! – மருத்துவர்கள் நம்பிக்கை

 

புற்றுநோயாளிகள் கூட கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்! – மருத்துவர்கள் நம்பிக்கை

கொரோனா தடுப்பூசி பற்றிய பீதி பலருக்கும் உள்ளது. இந்த நிலையில் உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் பிப்ரவரி 4ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புற்றுநோயாளிகள் கூட கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் நம்பிக்கை வார்த்துள்ளனர்.

புற்றுநோயாளிகள் கூட கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்! - மருத்துவர்கள் நம்பிக்கை

புற்றுநோயாளிகளுக்கு கீமோ, ரேடியேஷன் தெரப்பி என்று பல சிகிச்சை வழங்கப்படும். இதனால், அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருக்கும். அவர்கள் கூட கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு அது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நம் நாட்டில் கொரோனா வைரஸ் கிருமியை கொன்று, அதன் புரதத்தில் இருந்து தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, இறந்த வைரஸ் கிருமி மீண்டும் உயிர்பெற முடியாது என்பதால் பயம் வேண்டாம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

ஐதராபாத்தின் முன்னணி புற்றுநோய் மருத்துவமனையின் டாக்டர் அஜய் சாணக்கியா வல்லபனேனி இது குறித்து கூறுகையில், “கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோயாளிகளின்  நோய் எதிர்ப்பு சக்தி எப்படி இருக்கும், எவ்வளவு நாட்களுக்கு இருக்கும் என்பது பற்றி எல்லாம் இன்னும் முழுமையாக ஆய்வு நடத்தப்படவில்லை. புற்றுநோயாளிகள் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் நிலையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்.

புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி மிகமிகக் குறைந்துவிடும். அதனால் மற்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு அதிகம் உள்ளது. இந்த சூழலில் கொரேனா பரவலால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது” என்றார்.

மற்றொரு மருத்துவரான ஶ்ரீதர், “புற்றுநோயாளிகளைப் போல எச்.ஐ.வி நோயாளிகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. எனவே, இத்தகையவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி வழங்குவது நல்லது. அரசு இதை பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.