ஒரே மாதத்தில் 20 லட்சம் சந்தாதாரர்களை இழந்த வோடாபோன் ஐடியா... புதிய இணைப்புகளை அள்ளிய ஜியோ, ஏர்டெல்

 
வோடாபோன் ஐடியா

கடந்த பிப்ரவரி மாதத்தில் வோடாபோன் ஐடியா நிறுவனம் 20 லட்சம் மொபைல் இணைப்புகளை இழந்துள்ளது.

தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணைப்புகள் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023 பிப்ரவரி  மாத இணைப்புகள் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த பிப்ரவரி  மாதத்தில் ஜியோ புதிதாக 10 லட்சம் மொபைல் இணைப்புகளை வழங்கியுள்ளது. அந்த மாதத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த  புதிதாக 9.8 லட்சம் மொபைல் இணைப்புகளை வழங்கியது. 

ரிலையன்ஸ் ஜியோ

நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவமான வோடாபோன் ஐடியா கடந்த பிப்ரவரி மாதத்தில் 20 லட்சம் இணைப்புகளை இழந்துள்ளது. மொத்த மொபைல் இணைப்புகளில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக 35.28 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 32.39 சதவீத சந்தை பங்களிப்புடன் பார்தி ஏர்டெல் உள்ளது. வோடாபோன் ஐடியா நிறுவனம் 23.07 சதவீத சந்தை பங்களிப்புடன் 3வது இடத்தில் உள்ளது. கடந்த ஒராண்டில் மட்டும் வோடாபோன் ஐடியா நிறுவனம்  சுமார் 2 சதவீதம் சந்தை பங்களிப்பை இழந்துள்ளது.

பார்தி ஏர்டெல்

அதேசமயம், கடந்த ஒராண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் சந்தை பங்களிப்பு 2 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. மேலும், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 1 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. செயல்பாட்டில் உள்ள பயனாளர்கள் அடிப்படையில் பார்தி ஏர்டெல் முதலிடத்தில் (99.25 சதவீதம்) உள்ளது. அடுத்து ஜியோ (93.08 சதவீதம்)  உள்ளது. மூன்றாவது இடத்தில் வோடாபோன் ஐடியா (87.55 சதவீதம்) உள்ளது. பி.எஸ்.என்.எல். (51.75 சதவீதம்) நான்காவது இடத்தில் உள்ளது.