விற்பனையில் கலக்கிய உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள்.. மகிந்திரா, அசோக் லேலண்ட், டாடா மோட்டார்ஸ் ஹேப்பி..

கடந்த பிப்ரவரியில் மகிந்திரா, அசோக் லேலண்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை சிறப்பாக இருந்தது.
நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மகிந்திரா அண்ட் மகிந்திரா கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 58,801 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2022 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 8 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் மொத்தம் 54,455 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.
இந்துஜா குழுமத்தின் துணை நிறுவனமான அசோக் லேலண்ட் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 18,571 வாகனங்களை (உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி உள்பட) விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 27 சதவீதம் அதிகமாகும். 2022 பிப்ரவரி மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவனம் மொத்தம் 14,657 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.
டாடா குழுமத்தை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 79,705 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2022 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 3 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தம் 77,733 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.