ஒட்டு மொத்த எதிர்க்கட்சியையும் கைது செய்யுங்கள். எதிர்க்கட்சி இல்லாத பாரதத்தை உருவாக்குங்கள்... பா.ஜ.க.வை தாக்கிய மனோஜ் ஜா

 
மனோஜ் ஜா

ஒட்டு மொத்த எதிர்க்கட்சியையும் கைது செய்யுங்கள். எதிர்க்கட்சி இல்லாத பாரதத்தை உருவாக்குங்கள் என்று மத்திய பா.ஜ.க. அரசை ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா தெரிவித்தார்.

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்தின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் வீட்டில் அமலாக்கத்துறை கடந்த வெள்ளிக்கிழமையன்று சோதனை நடத்தினர். மேலும், லாலுவின் மகள்கள் சந்தா யாதவ், ஹேமா யாதவ், ராகிணி யாதவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. அபு டோஜானா உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதற்கிடையே மார்ச் 11ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி தேஜஸ்வி யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா எம்.பி. மனோஜ் ஜா கூறியதாவது: 

லாலு பிரசாத் யாதவ்

எதிர்க்கட்சியில் இருக்கும் போது அவர்களுக்கும் இதே சிகிச்சை அளிக்கப்படும் என்பதை பா.ஜ.க. நினைவில் கொள்ள வேண்டும். லாது பிரசாத் யாதவ்  மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை நள்ளிரவு வரை சோதனை செய்தனர். தேஜஸ்வி யாதவ் வீட்டில் சோதனை நடத்தியபோது, அவரது மனைவி ராஜஸ்ரீ யாதவ் ஒரு முக்கியமான கர்ப்ப நிலையில் இருந்தார், வீட்டில் குழந்தைகள் இருந்தனர். மத்திய அமைப்புகளை பயன்படுத்தி பா.ஜ.க. அரசியல் யுத்தத்தை நடத்துகிறது. மூடப்பட்ட வழக்குகள் திறக்கப்படுகின்றன. ஏஜென்சிகளிடம் ஸ்கிரிப்ட் ஒப்படைக்கப்படுகிறது. இது தேசிய கவலை கொண்ட பிரச்சினை. மத்திய ஏஜென்சிகள் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டுள்ளன. 

தேஜஸ்வி யாதவ்

கடைசி அழைப்பை (சி.பி.ஐ. சம்மன்) தேஜஸ்வி தவிர்க்கவில்லை. அவர் திட்டமிட்டப்படி செல்வார். எங்கள் ஆதரவாளர்கள் கோபத்தில் உள்ளனர். லாலு ஜியும், தேஜஸ்வியும் எங்கள் தொண்டர்களை இப்போது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். சில்லரை வியாபாரியாக நடந்து கொள்ளாதீர்கள். மொத்த வியாபாரி போல் செயல்படுங்கள். ஒட்டு மொத்த எதிர்க்கட்சியையும் கைது செய்யுங்கள். எதிர்க்கட்சி இல்லாத பாரதத்தை உருவாக்குங்கள். நாகாலாந்து சட்டப்பேரவை போல, அங்கு எதிர்க்கட்சிகள் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  கர்ப்பிணி மனைவியுடன் மருத்துவமனையில் உள்ளதால் இன்று (நேற்று) ஆஜராக முடியாது என்று தேஜஸ்வி யாதவ் சி.பி.ஐ.க்கு தகவல் தெரிவித்தார்.