அக்டோபரில் சில்லரை விலை பணவீக்கம் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது..

 
Inflation - பணவீக்கம்

கடந்த அக்டோபரில் சில்லரை விலை பணவீக்கம் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.77 சதவீதமாக குறைந்துள்ளது.

2022 அக்டோபர் மாத  சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரத்தை  மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. கடந்த அக்டோபர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு  6.77 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு  7.41 சதவீதமாக உயர்ந்து இருந்தது. 2022 ஏப்ரல்  மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் சுமார் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.99  சதவீதமாக உயர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம்

தொடர்ந்து 10வது மாதமாக சில்லரை விலை பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதத்திலும் ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள சில்லரை விலை பணவீக்கத்துக்கான அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை காட்டிலும்  அதிகமாக உள்ளது. எனவே பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ரிசர்வ் வங்கி எதிர்வரும் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்துமா அல்லது பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு நிதானமாக செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி

தொடர்ந்து 18 மாதங்களாக இரட்டை இலக்கில் இருந்த மொத்த விலை பணவீக்கம் கடந்த அக்டோபரில் ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது. 2022 அக்டோபர் மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 8.39 சதவீதமாக குறைந்துள்ளது. மொத்த விலை பணவீக்கம் கடந்த செப்டம்பரில் 10 சதவீதமாக இருந்தது. 2021 அக்டோபரில் மொத்த விலை பணவீக்கம்13.83 சதவீதமாக இருந்தது என மத்திய வர்த்தக துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.