18 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த சில்லரை விலை பணவீக்கம்.. வட்டி விகிதத்தை குறைக்குமா ரிசர்வ் வங்கி?

 
உணவு பொருட்கள் மற்றும் காய்கறி விலை குறைவாம்…. அதனால மொத்த விலை பணவீக்கம் குறைஞ்சு போச்சாம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.70 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும்போது நாட்டின் சில்லரை விலை பணவீக்க நிலவரத்தை கணக்கில் எடுத்தும் கொள்ளும். கடந்த ஆண்டு தொடக்கம் முதல் சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை காட்டிலும் அதிகமாக இருந்தது இதனால் கடந்த ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த தொடங்கியது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.66 சதவீதமாக குறைந்தது. இது ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள சில்லரை விலை பணவீக்கத்துக்கான உச்ச வரம்பான 6 சதவீதத்தை காட்டிலும் குறைவாகும். 

இந்திய ரிசர்வ் வங்கி

2023 ஏப்ரல் மாதத்திலும் சில்லரை விலை பணவீக்கம் குறைந்திருக்கும் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.70 சதவீதமாக குறைந்துள்ளது. தொடர்ந்து 2வது மாதமாக கடந்த ஏப்ரலில் சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் உச்சவரம்பான 6 சதவீதத்தை காட்டிலும் குறைந்துள்ளது. தொடர்ந்து சில்லரை விலை பணவீக்கம் குறைந்து வருவதால் ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வு நடவடிக்கையை நிறுத்தி வைக்கலாம் மற்றும் வட்டி விகிதத்தை குறைக்கவும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். 

தொழில்துறை

கடந்த 12 மாத காலத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 2.50 சதவீதம் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 2023 மார்ச் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 1.1 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. 2023 பிப்ரவரியில் தொழில்துறை உற்பத்தி 5.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருந்தது. 2022-23 முழு நிதியாண்டில் தொழில்துறை உற்பத்தி 5.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், 2021-22ம் நிதியாண்டில் தொழில்துறை உற்பத்தி 11.4 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.