இந்த மாத கடைசியில் ஐ.பி.ஓ.வுக்கான ஆவணங்கள் தாக்கல்... விரைவில் எல்.ஐ.சி. புதிய பங்கு வெளியீடு?..

 
எல்.ஐ.சி.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எல்.ஐ.சி.யின் புதிய பங்கு வெளியீடு இந்த நிதியாண்டின் இறுதிக்குள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட தொடங்கியுள்ளது.

இந்த நிதியாண்டில் (2021-22) பொதுத்துறை நிறுவனங்களில் கணிசமான பங்குகளை விற்பனை செய்து ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் தற்போதைய நிலவரப்படி, இந்த இலக்கு எட்டப்படுமா என்பது சந்தேகம்தான். அதேசமயம், நாட்டின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.யின் 5 முதல் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் இந்த பங்கு விற்பனை இலக்கை எளிதாக எட்டி விடலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய பங்கு வெளியீடு

தற்போது எல்.ஐ.சி.யின் புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்.ஐ.சி. நிறுவனம் இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் புதிய பங்கு வெளியீட்டுக்கான ஆவணங்களை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக பல்வேறு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் எல்.ஐ.சி.யின் புதிய பங்கு வெளியீடு நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்.

பணம்

புளும்பெர்க் அறிக்கையின்படி, எல்.ஐ.சி. நிறுவனத்தின் மதிப்பீடு சுமார் ரூ.15 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் காப்பீட்டாளரின் உட்பொதிக்கப்பட்ட மதிப்பு ரூ.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும். மத்திய அரசு எல்.ஐ.சி. பங்கு விற்பனை வாயிலாக ரூ.50 ஆயிரம் கோடி முதல் ரூ.90 ஆயிரம் கோடி திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.