பிப்ரவரியில் சில்லரை விலை பணவீக்கம் சிறிது குறைந்தது.. ஆனாலும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு

 
பணவீக்கம்

கடந்த பிப்ரவரியில் சில்லரை விலை பணவீக்கம் 6.44 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், ரிசர்வ் வங்கி அடுத்த நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்தில் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும்போது நாட்டின் சில்லரை விலை பணவீக்க நிலவரத்தை கணக்கில் எடுத்தும் கொள்ளும். கடந்த ஆண்டு தொடக்கம் முதல் சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை காட்டிலும் அதிகமாக இருந்தது இதனால் கடந்த ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த தொடங்கியது. இந்நிலையில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில் சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள அதிகபட்சவரம்பான 6 சதவீதத்தை காட்டிலும் குறைந்தது. கடந்த நவம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.88 சதவீதமாக இருந்தது. கடந்த டிசம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 12 மாதங்களில் இல்லாத அளவுக்கு  5.72 சதவீதமாக குறைந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி

இந்நிலையில் கடந்த ஜனவரியில் சில்லரை விலை பணவீக்கம் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.52 சதவீதமாக உயர்ந்தது. இது ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள சில்லரை விலை பணவீக்கத்துக்கான உச்ச வரம்பான 6 சதவீதத்தை காட்டிலும் அதிகமாகும். இந்நிலையில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நேற்று கடந்த பிப்ரவரி மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்து புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அனைவரும் எதிர்பார்த்ததுபோல் கடந்த பிப்ரவரில் சில்லரை விலை பணவீக்கம் சிறிது குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் சில்லரை விலை பணவீக்கம் 6.44 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் இது ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள சில்லரை விலை பணவீக்கத்துக்கான உச்ச வரம்பான 6 சதவீதத்தை காட்டிலும் அதிகமாகும். 

வட்டி விகிதம் உயர்வு

பணவீக்கம் அதிகரித்து வருவது இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான அறிகுறிகளை காட்டுகின்றன.  இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக் கொள்கை கூட்டம் வரும் ஏப்ரலில் நடைபெற உள்ளது. தற்போது சில்லரை விலை பணவீக்கம் குறைந்தாலும் உச்ச வரம்பை காட்டிலும் அதிகமாக உள்ளதால், வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்த வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கி மீண்டும் ஒரு முறை வட்டி விகிதத்தை உயர்த்தினால் கடன் வாங்கும் செலவு ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயரக்கூடும் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.