2021ம் ஆண்டில் 1,050 டன் தங்கம் இறக்குமதி... அரசு வட்டாரங்கள் தகவல்

 
தங்கம்

கடந்த 2021ம் ஆண்டில் 1,050 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

நம் நாட்டில் திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் என எந்தவொரு குடும்ப விழாக்களிலும் தங்கம் பிரதானமாக இருக்கும். மஞ்சள் உலோகமான தங்கம் சிறந்த முதலீடாகவும் கருதப்படுகிறது. மேலும் இக்கட்டான நேரங்களில் நிதி தேவைக்கு கொடுக்கும் என்பதால்தான் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் நம்மவர்கள் வாங்குவது குறையுமே தவிர வாங்காமல் இருக்கமாட்டார்கள். அதேசமயம் உள்நாட்டில் உற்பத்தி பெயரளவுக்கு உள்ளதால் தேவையை பூர்த்தி செய்வதற்காக தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. 

தங்க நகைகள்

இந்நிலையில், 2021ம் ஆண்டில் நம் நாட்டின் தங்கம் இறக்குமதி மதிப்பு மற்றும் அளவு அடிப்படையில் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டில்  மதிப்பு அடிப்படையில் சுமார் ரூ.4.17 லட்சம் கோடிக்கு  (5,570  கோடி டாலர்) தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டில் சுமார் ரூ.1.65 லட்சம் கோடிக்கு (2200 கோடி டாலர்)  தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது. ஆக கடந்த ஆண்டில் தங்கம் இறக்குமதி மதிப்பு அடிப்படையில் 2 மடங்கு மேல் அதிகரித்துள்ளது.  அளவு அடிப்படையில் பார்த்தால், 2021ம் ஆண்டில் 1,050 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது 2020ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவை காட்டிலும் 430 டன் அதிகமாகும்.

தங்க கட்டிகள்

கோவிட் காரணமாக பெரும்பாலான திருமணங்கள் மிகவும் எளிமையாக குறைந்த செலவில் நடந்தன. இதனால் மிச்சமான பணத்தை தங்கம் வாங்குவதில் செலவிட்டனர். கொரோனா வைரஸ் 3வது அலை பற்றி சந்தேகம் உள்ளவர்களும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்களும் தங்களது முதலீட்டை தங்கமாக பன்முகப்படுத்துகிறார்கள் இதனால் கடந்த ஆண்டில் தங்கத்துக்கான தேவை இருந்ததாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.