மன்னிப்பு கேட்க வேண்டிய அளவுக்கு ராகுல் காந்தி எதுவும் பேசவில்லை.. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

 
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட சசி தரூருக்கு அரஸ்ட் வாரண்ட்!

மன்னிப்பு கேட்க வேண்டிய அளவுக்கு ராகுல் காந்தி எதுவும் பேசவில்லை என்று பா.ஜ.க.வினருக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பதிலடி கொடுத்தார்.

ராகுல் காந்தி அண்மையில் லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகையில், இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்றும், தான் உள்பட பல அரசியல்வாதிகள் கண்காணிப்பில் உள்ளனர் என்றும் தெரிவித்தார். இதனையடுத்து லண்டனில் இந்திய ஜனநாயகத்தையும், நாட்டின் அவமதித்ததிற்காக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எதுவும் கூறவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,  மக்களவை எம்.பி.யுமான  சசி தரூர் கூறியதாவது: மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அளவுக்கு ராகுல் காந்தி எதுவும் கூறவில்லை. நமது ஜனநாயகத்தின் நிலை குறித்தும், ஆளும் அரசாங்கத்தின் நடைமுறைகளால் அதன் (ஜனநாயகம்) மீதான தாக்குதல்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். வெளிநாடுகளில் பிரதமர் மோடி கூறியதை விட, ராகுல் காந்தியின் பேச்சு லேசானது. 

மோடி

பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சி மற்றும் முந்தைய அரசாங்கத்தை தொடர்ந்து தாக்கி வருகிறார். மேலும் தான் ஆட்சிக்கு வருவதற்கு முன் நாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று மோடி குற்றம் சாட்டினார். வெளிநாட்டில் இது போன்ற பேச்சுக்கள் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது, காங்கிரஸால் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.