பார்தி ஏர்டெல் லாபம் ரூ.3,006 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.4 இறுதி டிவிடெண்ட்..

பார்தி ஏர்டெல் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,006 கோடி ஈட்டியுள்ளது.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனம் 2023 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,006 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகமாகும்.
2023 மார்ச் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.36,009 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 14.3 சதவீதம் அதிகமாகும். 2023 மார்ச் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு பயனாளர் வாயிலான சராசரி வருவாய் ரூ.193ஆக உள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் புதிதாக 31 லட்சம் மொபைல் இணைப்புகளை வழங்கியுள்ளது. இதனையடுத்து மார்ச் இறுதி நிலவரப்படி பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை 37.5 கோடியாக உள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.4 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, பார்தி ஏர்டெல் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.68 சதவீதம் உயர்ந்து ரூ.793.20ஆக இருந்தது.