விற்பனையில் தடுமாறிய பஜாஜ், டி.வி.எஸ்... தூள் கிளப்பிய கியா இந்தியா

 
பஜாஜ் ஆட்டோ

கடந்த டிசம்பர் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ மற்றும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை சரிவு கண்டுள்ளது.  அதேசமயம், கியா இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை அதிகரித்துள்ளது.

நாட்டின் முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 2,81,486 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 22 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 3,62,470 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.  

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி

நாட்டின் முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி கடந்த டிசம்பரில் மொத்தம் 2,42,012 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 3.58 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி மொத்தம் 2,50,993 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

கியா

இந்திய கார் சந்தையில் மிகவும் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் கியா இந்தியா நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 15,184 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 94.7 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் கியா இந்தியா நிறுவனம் மொத்தம் 7,797 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.