திவாலாகி விட்டேன் என்ற அனில் அம்பானி.. கடனை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வரும் நிறுவனங்கள்

 
அனில் அம்பானி

கடந்த ஆண்டு இங்கிலாந்து நீதிமன்றத்தில், எனது நிகர சொத்து மதிப்பு பூஜ்யம் என்றும் கிட்டத்தட்ட நான் திவாலாகி விட்டேன் என்று அனில் அம்பானி தெரிவித்த நிலையில், அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் கடனை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகின்றன. 

இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானி. ஒரு காலத்தில் முகேஷ் அம்பானியை காட்டிலும் பெரிய பணக்காரராக இருந்தவர் முகேஷ் அம்பானி. இவர் 2008ல்  சுமார் 4200 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 6வது மிகப்பெரிய பணக்காரராக இருந்தவர். ஆனால் அதன் பிறகு பிசினஸில் ஏற்பட்ட அடியால் அவரது சொத்து மதிப்பு படிபடியாக குறைய தொடங்கியது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் உள்பட பெரும்பாலான நிறுவனங்கள் கடனில் விழுந்தன. தற்போது அனில் திருபாய் அம்பானி குழும நிறுவனங்களுக்கு கொடுத்த கடனை கடன் கொடுத்த நிறுவனங்கள் திருப்பி கேட்டு வருகின்றன. பல கடன் கொடுத்த நிறுவனங்கள் நீதிமனற்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளன. 

ரிலையன்ஸ் பவர்
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ரூ.5 ஆயிரம் கோடி கடனை திருப்பி தராததால் சீன நிறுவனங்கள் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. 2020ல் இங்கிலாந்து நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது அனில் அம்பானி, எனது பங்குகளின் தற்போதைய மதிப்பு தோராயமாக 8.24 கோடி டாலராக குறைந்துள்ளது மேலும் எனது பொறுப்புகளை கணக்கில் கொண்ட பிறகு  தனது நிகர சொத்து மதிப்பு பூஜ்யம்  என்று தெரிவித்தார். அதன் பிறகு, ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேப்பிட்டல் மற்றும் ரிலையன்ஸ் பவர் போன்ற அதிக கடனில் உள்ள சில நிறுவனங்களின் கடனை குறைத்துள்ளதாக அனில் திருபாய் அம்பானி குழுமம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

2021 மார்ச் இறுதி நிலவரப்படி தனது கடனை  ரூ.14,300 கோடியிலிருந்து ரூ.8,781 கோடியாக குறைந்துள்ளதாக ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 2020ம் நிதியாண்டில் ரூ.30,737 கோடியாக இருந்த கடனை 2020 டிசம்பரில் ரூ.26 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளது. ரிலையன்ஸ் கேப்பிட்டல் 2020-21ம் நிதியாண்டில் தனது கடனை ரூ.26,887 கோடியாக குறைத்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனத்தின் கடன் ரூ.46,160 கோடியாக இருந்தது.