கிடுகிடுவென உயர்ந்த விலை.. மந்தமான தங்கம் விற்பனை

 
தங்கத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்…. ஆனாலும் ரூ.4,626 கோடிக்கு தங்கம் இறக்குமதி…

விலை உயர்ந்ததால், இந்தியாவில் கடந்த ஜனவரி-மார்ச் காலத்தில் தங்கம் விற்பனை 18 சதவீதம் குறைந்துள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

உலக தங்க கவுன்சிலின் அறிக்கையின்படி, தங்கத்தின் விலை உயர்ந்ததால் கடந்த மார்ச் வரையிலான 3 மாதங்களில் நம் நாட்டில் தங்கம் விற்பனை அளவு மற்றும்  மதிப்பு  அடிப்படையில் சரிவடைந்துள்ளது. நம் நாட்டில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 135.5 டன் தங்கம் விற்பனையாகியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 18 சதவீதம் குறைவாகும். அப்போது  ( 2021 ஜனவரி-மார்ச்) 165.8 டன் தங்கம் விற்பனையாகி இருந்தது.

தங்கம்

மதிப்பு அடிப்படையில், கடந்த மார்ச் காலாண்டில் ரூ.61,550 கோடிக்கு தங்கம் விற்பனையாகி உள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 12 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் நம் நாட்டில் ரூ.69,720 கோடிக்கு தங்கம் விற்பனையாகி இருந்தது. உலக தங்க கவுன்சிலின இந்திய பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி சோமசுந்தரம் கூறுகையில், போர் பதற்றம் காரணமாக ஜனவரியில் தங்கத்தின் விலை உயர தொடங்கியது. கடந்த மார்ச் காலாண்டில் தங்கத்தின் விலை  பத்து கிராமுக்கு 8 சதவீதம் அதிகரித்து ரூ.45,434ஆக (வரிகள் இல்லாமல்) இருந்தது.

தங்கம் விலை

நம் நாட்டில் திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் என எந்தவொரு குடும்ப விழாக்களிலும் தங்கம் பிரதானமாக இருக்கும். மஞ்சள் உலோகமான தங்கம் சிறந்த முதலீடாகவும் கருதப்படுகிறது. மேலும் இக்கட்டான நேரங்களில் நிதி தேவைக்கு கொடுக்கும் என்பதால்தான் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் நம்மவர்கள் வாங்குவது குறையுமே தவிர வாங்காமல் இருக்கமாட்டார்கள். அதேசமயம் உள்நாட்டில் உற்பத்தி பெயரளவுக்கு உள்ளதால் தேவையை பூர்த்தி செய்வதற்காக தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.