தொடர்ந்து நஷ்டத்தை சந்திக்கும் வோடாபோன் ஐடியா.. 3 மாதத்தில் ரூ.7,596 கோடி இழப்பு..

 
வோடாபோன் ஐடியா

வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு 2022 செப்டம்பர் காலாண்டில் ரூ.7,595.5 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

நாட்டின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான வோடாபோன் ஐடியா தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு 2022 செப்டம்பர் காலாண்டில் ரூ.7,595.5 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது 2022 ஜூன் காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். அந்த காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.7,296 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

வோடாபோன் ஐடியா

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வோடாபோன் இந்தியா நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.10,614.6 கோடி ஈட்டியுள்ளது. இது 2022 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 2 சதவீதம் அதிகமாகும். கடந்த செப்டம்பர் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் ஒரு வாடிக்கையாளர் வாயிலான சராசரி வருவாய் ரூ.131ஆக உயர்ந்துள்ளது. 2022 செப்டம்பர் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனம் 60 லட்சம் இணைப்புகளை இழந்துள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை 23.4 கோடியாக உள்ளது.

வோடாபோன் ஐடியா

கடந்த செப்டம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் நிகர கடன் ரூ.2.2 லட்சம் கோடியாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, வோடாபோன் ஐடியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.04 சதவீதம் உயர்ந்து ரூ.8.50ஆக இருந்தது.