லாபத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகள்.. மத்திய அரசு நிம்மதி

 
இந்தியன் வங்கி

இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூகோ வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகள் கடந்த செப்டம்பர் காலாண்டில் லாபம் ஈட்டியுள்ளன.

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி 2022 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,225 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 13 சதவீதம் அதிகமாகும். 2022 செப்டம்பர் காலாண்டில் இந்தியன் வங்கியின் மொத்த வருவாய் ரூ.12,538 கோடியாக அதிகரித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, இந்தியன் வங்கி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.80 சதவீதம் குறைந்து ரூ.249.45ஆக இருந்தது.

யூகோ வங்கி

பொதுத்துறை வங்கியான யூகோ வங்கி 2022 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.505  கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் சுமார் இரண்டரை மடங்கு அதிகமாகும். கடந்த செப்டம்பர் இறுதி நிலவரப்படி, யூகோ வங்கி  வழங்கிய கடன் 17 சதவீதம் அதிகரித்து ரூ.1.42 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் 10 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.2.35 லட்சம் கோடியாகவும் உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, யூகோ வங்கி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.46 சதவீதம் அதிகரித்து ரூ.14.94ஆக இருந்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கி

மத்திய அரசுக்கு சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி 2022 செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.411 கோடி ஈட்டியுள்ளது. 2021 செப்டம்பர் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,105 கோடி ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 2022 செப்டம்பர் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மொத்த வருவாய் ரூ.23,001.26 கோடியாக உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, பஞ்சாப் நேஷனல் வங்கி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.09 சதவீதம் அதிகரித்து ரூ.41.75ஆக இருந்தது.