வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.. நாளை முதல் தாக்கல் செய்வோருக்கு ரூ.5,000 வரை அபராதம்..

 
வருமான வரி கணக்கு தாக்கல்

2021-22ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை அபராதம் இன்றி தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். நாளை முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், வருமானத்தின் அளவை பொறுத்து ரூ1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும் என தகவல்.

ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஜூலை 31ம் தேதி கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்படும். இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் மட்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு கால அவகாசம் வழங்கியது. குறிப்பாக, கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், 20221-22ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது கடந்த ஜூன் 15ம் தேதி தொடங்கி விட்டது.  அதேசமயம் இந்த ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு கால அவகாசம் வழங்கும் என்று சிலர் எதிர்பார்த்தனர்.

வருமான வரி கணக்கு தாக்கல்

ஆனால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய  காலஅவகாசம் வழங்க வாய்ப்பில்லை என்று அண்மையில் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதனையடுத்து வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் கணக்கை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.  இன்றைக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டால்,  அடுத்து தாக்கல் செய்யும் போது அபராதத்தோடு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியது இருக்கும்.

அபராதம்

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் சுமார் 1 கோடி பேர்  தாக்கல் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைக்குள் தாக்கல் செய்ய தவறினால், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தாக்கல் செய்வோருக்கு அபராதம் விதிக்கப்படும். தாமதமாக தாக்கல் செய்தால் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி கணக்குக்கு ரூ.1,000 அபராதமும், ரூ.5 லட்சத்துக்கு அதிகமான வருமான வரி கணக்குக்கு ரூ.5 ஆயிரமும் அபராதமாக செலுத்த வேண்டியது இருக்கும்.