ஏப்ரலில் டாடா, டொயோட்டா வாகன விற்பனை வளர்ச்சி.. சரிவை சந்தித்த மாருதி சுசுகி

 
டாடா மோட்டார்ஸ்

கடந்த ஏப்ரலில் டாடா மோட்டார்ஸ் மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை அதிகரித்துள்ளது. அதேசமயம் மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை குறைந்துள்ளது.

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 72,468 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 74 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தத்தில் 41,729 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.

மாருதி சுசுகி கார் மாடல்கள்

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா, கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.50 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 6 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் மொத்தம் 1.59 லட்சம் கார்களை விற்பனை செய்து இருந்தது. ஏற்றுமதி அதிகரித்துள்ளபோதிலும், உள்நாட்டில் விற்பனை குறைந்ததே இந்நிறுவனத்தின் விற்பனை சரிவுக்கு முக்கிய காரணம்.

டொயோட்டா

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 15,085 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 57 சதவீதம் அதிகமாகும். 2021 ஏப்ரல் மாதத்தில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் மொத்தம் 9,600 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.