ஜியோவை நாடும் வாடிக்கையாளர்கள்.. தொடர்ந்து மோசமடைந்து வரும் வோடாபோன் ஐடியா

 
ரிலையன்ஸ் ஜியோ

கடந்த மே மாதத்தில் ஜியோ நிறுவனம் புதிதாக 31 லட்சம் மொபைல் இணைப்புகளை வழங்கியுள்ளது. 

தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணைப்புகள் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022 மே மாத இணைப்புகள் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மே மாதத்தில் ஜியோ 31 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. இதனையடுத்து ஜியோவின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 40.87 கோடியாக அதிகரித்துள்ளது.

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த மே மாதத்தில் புதிதாக 10.2 லட்சம் மொபைல் இணைப்புகளை வழங்கியது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் மொத்த சந்தாரார்களின் எண்ணிக்கை 36.31 கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டின் 3வது பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான வோடாபோன் இந்தியா 7.59 லட்சம் இணைப்புகளை இழந்துள்ளது. கடந்த மே மாத நிலவரப்படி, நம் நாட்டில் உள்ள மொத்த மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கை 115 கோடியாக அதிகரித்துள்ளது.

வோடாபோன் ஐடியா

கடந்த மே மாதத்தில் நகரப்புறங்களில் மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கை 0.12 சதவீதம் உயர்ந்து 62.45 கோடியாகவும், கிராமப்புறங்களில் மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கை 0.4 சதவீதம் அதிகரித்து 52.09 கோடியாகவும் உள்ளது. நாட்டின் மொத்த மொபைல் இணைப்புகளில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக 35.69 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 31.62 சதவீத சந்தை பங்களிப்புடன் பார்தி ஏர்டெல் உள்ளது. வோடாபோன் ஐடியா நிறுவனம் 22.56 சதவீத சந்தை பங்களிப்புடன் 3வது இடத்தில் உள்ளது.