ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருவாய் 15 சதவீதம் வளர்ச்சி.. லாபம் ரூ.17,806 கோடி...

 
பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.17,806 கோடி ஈட்டியுள்ளது.

கச்சா எண்ணெய் முதல் தொலைத்தொடர்பு துறை வர்த்தகம் என பல்வேறு வர்த்தகங்களில் கொடி கட்டி பறக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2022 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.17,806 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 13.30 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.20,539 கோடி ஈட்டியிருந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

2022 டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.2.20 லட்சம் கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 15.32 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.1.91 லட்சம் கோடி ஈட்டியிருந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் 2022 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.4,881 கோடியும், செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.24,892 கோடியும் ஈட்டியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ

2022 டிசம்பர் காலாண்டில் ஜியோ நிறுவனம் நிகர அடிப்படையில் 53 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது.  கடந்த டிசம்பர் காலாண்டில் ஜியோ நிறுவனத்தின் ஒரு சந்தாதாரர் வாயிலான சராசரி வருவாய் ரூ.178.20ஆக உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.15 சதவீதம் குறைந்து ரூ.2,442.70ஆக இருந்தது.