நாய் கடித்தால் அதன் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்.. நொய்டா ஆணையம் அதிரடி நடவடிக்கை

 
நாய்

உத்தர பிரதேசம் நொய்டாவில், நாய் கடித்து யாருக்கும் காயம் ஏற்பட்டால் அதன் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று நொய்டா ஆணையம் தெரிவித்துள்ளது.


உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் செல்ல பிராணியான நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதற்கு முடிவு கட்டும் நோக்கில் நொய்டா ஆணையம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. நொய்டா ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, பதிவு செய்யப்படாத நாயை நகரில் வைத்திருந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். நாய் கடித்து யாரும் காயம் அடைந்தால் அதன் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் விதிக்கப்படும் என நொய்டா ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

நொய்டா ஆணைய கூட்டம்

நொய்டா ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரியின் டிவிட்டரில், நொய்டா ஆணையத்தின் 207வது கூட்டத்தில் தெரு/செல்லப் நாய்கள்/ செல்லப் பூனைகளுக்கு நொய்டா ஆணையத்தின் கொள்கையை வகுப்பது குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்திய விலங்குகள் நல வாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, நொய்டா பகுதிக்கான கொள்கை ஆணையத்தால் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிட்புல் இன நாய்

கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தர பிரதேசம் கான்பூர் மாநகராட்சி, மாநகராட்சியில்  நாய்கள் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதை தொடர்ந்து, ஆபத்தானதாக கருதப்படும் பிட்புல் ரோட்வீலர் ஆகிய 2 ஆபத்தான நாய் இனங்களையும் வளர்ப்பதற்கு தடை விதித்தது. மேலும் தடையை மீறி இந்த நாய் இனங்களை வளர்த்தால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், அந்த நாயும் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.