இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் அமோகம்.. ஏப்ரலில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.68 லட்சம் கோடி..

 
ஜி.எஸ்.டி.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.1.68 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு, வரி விகிதத்தை செயல்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் (ஜி.எஸ்.டி.) வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. பொதுவாக ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருக்கிறது. 2020-21ம் நிதியாண்டில்  ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.11.36 லட்சம் கோடி (தோராயமாக) வசூலாகி இருந்தது. கடந்த நிதியாண்டில் (2021 ஏப்ரல்-2022 மார்ச்)   ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.14.87 லட்சம் கோடி (தோராயமாக) வசூலாகி இருந்தது. 

ஜி.எஸ்.டி.

இந்த நிதியாண்டின் (2022 ஏப்ரல்-2023 மார்ச்) முதல் மாதமான கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே மாதத்தில் ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.1.68 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. பொருளாதார நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதை ஜி.எஸ்.டி. வசூல் நிலவரம் வெளிப்படுத்துகிறது. இதற்கு முன் 2022 மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.1.42 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வாயிலாக வசூலாகி இருந்தது.

ஜி.எஸ்.டி.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜி.எஸ்.டி. வருவாயாக ரூ.1,67,540 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. வரி ரூ.33,159 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. வரி ரூ.41,793 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரி ரூ.81,939 கோடியும் (இறக்குமதி பொருட்கள் மீதான வரி வசூல் ரூ.36,705 கோடியும் உள்பட), செஸ் ரூ.10,649 கோடியும் (இறக்குமதி பொருட்கள் மீதான வரி வசூல் ரூ.857 கோடி உள்பட)  அடங்கும்.