ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் உயர்வு.. ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துமா?..

 
இந்திய ரிசர்வ் வங்கி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது இதனால் ரிசர்வ் வங்கி தனது எதிர்வரும் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் கடனுக்கான வட்டியை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

2022 ஆகஸ்ட் மாத  சில்லரை விலை பணவீக்கம் மற்றும் கடந்த ஜூலை மாத தொழில்துறை  குறித்த புள்ளிவிவரங்களை  மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2022 ஜூலை மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 6.71 சதவீதமாக குறைந்து இருந்தது. 2022 ஏப்ரல்  மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் சுமார் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.99  சதவீதமாக உயர்ந்து இருந்தது. அதன் பிறகு வந்த 3 மாதங்களிலும் சில்லரை விலை பணவீக்கம் படிப்படியாக குறைந்து வந்தது.

பணவீக்கம்

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. இது  ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள சில்லரை விலை பணவீக்கத்துக்கான அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை காட்டிலும்  அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.  தனது கட்டுப்பாட்டு அளவை காட்டிலும் சில்லரை விலை பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பதால், சில்லரை விலை பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி எதிர்வரும் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் வரும் மாதங்களில் பணவீக்கம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவே ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியில் எந்தவித மாற்றமும் செய்ய வாய்ப்பில்லை என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

தொழில்துறை

கடந்த ஜூலை மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 2.4 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்த மாதத்தில் மின் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக முன்னேற்றம் கண்டு இருந்ததே இதற்கு காரணம். 2021 ஜூலை மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 11.5 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாத சில்லரை விலை பணவீக்கம் மற்றும் ஜூலை மாத தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்கள் பங்குச் சந்தை முடிவடைந்த பிறகு வெளியானதால், அவற்றின் தாக்கம் இன்றைய பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.