எச்.டி.எஃப்.சி. வங்கி லாபம் ரூ.12,259 கோடி.. வட்டி வருவாய் 25 சதவீதம் வளர்ச்சி..

 
எச்.டி.எஃப்.சி. வங்கி

எச்.டி.எஃப்.சி. வங்கி 2022 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.12,259 கோடி ஈட்டியுள்ளது. 

நாட்டின் முன்னணி தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி. வங்கி தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. எச்.டி.எஃப்.சி. வங்கி 2022 டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.12,259 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 18.5 சதவீதம் அதிகமாகும்.

எச்.டி.எப்.சி. வங்கி

2022 டிசம்பர் காலாண்டில் எச்.டி.எஃப்.சி. வங்கியின் நிகர வட்டி வருவாய் ( வட்டி வரவுக்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசம்) ரூ.22,988 கோடியாக உள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் சுமார் 25 சதவீதம் அதிகமாகும். 2022 டிசம்பர் காலாண்டில் எச்.டி.எஃப்.சி. வங்கியின் செயல்பாட்டு செலவினம் ரூ.12,464 கோடியாக உள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 26.5 சதவீதம் அதிகமாகும்.

எச்.டி.எப்.சி. வங்கி

2022 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, எச்.டி.எஃப்.சி. வங்கியின் மொத்த வாராக் கடன் 1.23 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 0.33 சதவீதமாகவும் உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த  வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, எச்.டி.எஃப்.சி. வங்கி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.07 சதவீதம் உயர்ந்து ரூ.1,600.85ஆக இருந்தது.