விலை உயர்வு எதிரொலி.. ஏப்ரலில் குறைந்த தங்கம் இறக்குமதி.. நாட்டுக்குள் வந்த ரூ.13 ஆயிரம் கோடி தங்கம்

 
தங்கம் விலை சரிவு

கடந்த ஏப்ரல் மாதத்தில் நம் நாட்டில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

நம் நாட்டில் திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் என எந்தவொரு குடும்ப விழாக்களிலும் தங்கம் பிரதானமாக இருக்கும். மஞ்சள் உலோகமான தங்கம் சிறந்த முதலீடாகவும் கருதப்படுகிறது. மேலும் இக்கட்டான நேரங்களில் நிதி தேவைக்கு கொடுக்கும் என்பதால்தான் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் நம்மவர்கள் வாங்குவது குறையுமே தவிர வாங்காமல் இருக்கமாட்டார்கள். அதேசமயம் உள்நாட்டில் உற்பத்தி பெயரளவுக்கு உள்ளதால் தேவையை பூர்த்தி செய்வதற்காக தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. 

தங்கம்

ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் இறுதி முதல் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர தொடங்கியது. இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் நம் நாட்டின் தங்க இறக்குமதி 72 சதவீதம் குறைந்துள்ளது. 2022 ஏப்ரல் மாதத்தில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடிக்கு (120 கோடி டாலர்) மதிப்புக்கு தங்கம் நம் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் மாதத்தில் சுமார் ரூ.48 ஆயிரம் கோடிக்கு (623 கோடி டாலர்) தங்கம் இறக்குமதியாகி இருந்தது.

தங்கம் விலை

தங்கம் இறக்குமதியால் அன்னிய செலாவணி அதிகளவில் வெளியேறுவது மத்திய அரசுக்கு கவலை அளிக்கும் விஷயமாகும். மேலும், தங்கம் இறக்குமதி அதிகரித்தால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும். சர்வதேச அளவில் தங்கம் இறக்குமதியில் சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.