பார்தி ஏர்டெல் வருவாய் 22 சதவீதம் வளர்ச்சி... லாபம் ரூ.2,145 கோடி..

 
பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,145.2 கோடி ஈட்டியுள்ளது. 

நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனம் 2022 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,145.2 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 89 சதவீதம் அதிகமாகும். 2021 செப்டம்பர் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,134 கோடி ஈட்டியிருந்தது.

பார்தி ஏர்டெல்

2022 செப்டம்பர் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.34,526.8 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 22 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.28,326.40 கோடி ஈட்டியிருந்தது. 2022 செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு ஒரு பயனாளர் வாயிலான சராசரி வருவாய் ரூ.190ஆக உயர்ந்துள்ளது.

பார்தி ஏர்டெல்

2022 செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர கடன் (லீஸ் கடமைகளை தவிர்த்து) ரூ.1.57 லட்சம் கோடியாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, பார்தி ஏர்டெல் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.40 சதவீதம் உயர்ந்து ரூ.835.35ஆக இருந்தது.