வர்த்தக துளிகள்.. சிட்டி, அமேஸ் கார்களின் விலையை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்

 
ஹோண்டா கார்ஸ்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது செடான் கார்களான சிட்டி, அமேஸ் கார்களின் விலையை வரும் ஜூன் மாதம் முதல் 1 சதவீதம் வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. மூலதன செலவு அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள தாக்கத்தை ஈடுகட்ட தவிர்க்க முடியாமல் இந்த விலை உயர்வை மேற்கொள்வதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அஸ்வினி வைஷ்ணவ்

தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். தனது 4ஜி தொலைத்தொடர்பு சேவையை அடுத்த இரண்டு வாரங்களில் தொடங்கும். மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது 5ஜி நெட்வொர்க்கிற்கு மேம்படுத்தும் என்று தெரிவித்தார். பி.எஸ்.என்.எல். நிறுவனம் தற்போது 2ஜி, 3ஜி சேவைகளை வழங்கி வருகிறது. அதேசமயம் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கை நாடு முழுவதும் தீவிரமாக துவக்கி வருகின்றன.

பணவீக்கம்

கடந்த சில மாதங்களாக நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில் 2023 மே மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 4.7 சதவீதத்தை காட்டிலும் குறைவாகவே இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ்  தெரிவித்தார். அதேசமயம், பணவீக்கம் குறைந்து விட்டது என்று திருப்தி அடைய முடியாது, பணவீக்கம் மீதான யுத்தம் தொடரும் என்று சக்திகந்த தாஸ் தெரிவித்தார்.

ஏ.டி.எம்.கள்

வங்கி லாஜிஸ்டிக்ஸ் மற்றும் டெக்னாலஜி சர்வீசஸ் வழங்கும் நிறுவனமான சி.எம்.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023 மார்ச் இறுதி நிலவரப்படி, ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பது 235 சதவீதம் உயர்ந்து ரூ.2.84 லட்சம் கோடியாக உள்ளது. இது பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டு 76 மாதங்களுக்கு மேலாகியும் பணமே இன்னும் ராஜாவாக உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.