வர்த்தக துளிகள்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதிரொலி, நகைக்கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள்

 
தங்க நகைக் கடை

ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது முதல், தங்கம் அல்லது வெள்ளியை வாங்குவதற்காக தங்க நகை கடைகளில் மக்கள் அதிகளவில் விசாரித்து வருகின்றனர். இருப்பினும், 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு  நடவடிக்கையின் போது காணப்பட்ட சூழ்நிலையை போல தங்கம் மற்றும் வெள்ளியை வாங்குவதில் பீதி இல்லை என்று நகைக்கடை அமைப்பான ஜி.ஜே.சி. தெரிவித்துள்ளது.

சர்க்கரை

நடப்பு சர்க்கரை பருவத்தில் சர்க்கரை உற்பத்தியில் உத்தர பிரதேசம் மகாராஷ்டிராவை முந்தியது. நடப்பு சர்க்கரை பருவத்தில் உத்தர பிரதேசம் 1.07 கோடி டன் சர்க்கரை உற்பத்தி செய்துள்ளது. அதேசமயம் மகாராஷ்டிரா மாநிலம் 1.05 கோடி டன் அளவுக்கே சர்க்கரை உற்பத்தி செய்துள்ளது. உத்தர பிரதேசம் 2,348 லட்சம் டன் கரும்பு சாகுபடி  செய்துள்ளது. அதேசமயம் மகாராஷ்டிராவின் கரும்பு உற்பத்தி 1,413 லட்சம் டன்னாக உள்ளது என்று உத்தர பிரதேச அமைச்சர் லட்சுமி நாராயண் சவுத்ரி  தெரிவித்தார்.

ரூ.500 நோட்டுகள்

2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் ரூ.500  நோட்டின் பங்கு 20 சதவீதத்துக்கும் சிறிது அதிகமாக இருந்தது. ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரூ.500 நோட்டுகளின் பங்கு 70 சதவீதத்தை தாண்டி உயர்ந்துள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் இதர ரூபாய் நோட்டுகளின் பங்கு குறைந்துள்ளது. குறிப்பாக ரூ.2000 நோட்டுகளின் பங்கு 2021-22ம் நிதியாண்டில் 13.8 சதவீதமாக குறைந்தது. கடந்த நிதியாண்டில் 10.8 சதவீதமாக குறைந்துள்ளது. என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பெண் பணியாளர்

கடைத் தளம் முதல் பொறியியல் மற்றும் செயல்பாட்டு மேலாண்மை வரையிலான பல்வேறு பிரிவுகளில்,  நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுசுகி இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப்,  மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் பாலின பன்முகத்தன்மையை  மேம்படுத்த அதிகளவில் பெண்களை வேலைக்கு அமர்த்துகின்றன என தகவல்.