இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

 
பங்கு வர்த்தகம்

நிறுவனங்களின் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள், அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், பி.பி.சி.எல்., அசோக் லேலண்ட், ஹிண்டால்கோ, ஆயில் இந்தியா, நால்கோ,  வோடாபோன் ஐடியா, ஓ.என்.ஜி.சி., சன் பார்மா மற்றும் எல்.ஐ.சி. உள்பட பல முன்னணி நிறுவனங்கள் தங்களது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட உள்ளன.  சப்ளை நெருக்கடி காரணமாக கடந்த வாரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அது இந்தியா போன்ற கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பாதமாக அமையும். 

அசோக் லேலண்ட்

அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த வாரம் இந்திய பங்குகளில் ரூ.4,097 கோடி முதலீடு செய்தனர். அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை வாங்கி குவித்தது பங்குச் சந்தைகளுக்கு ஆதரவாக அமையும். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.677 கோடி  மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர். உள்நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் முதலீட்டை குவித்தால் பங்கு வர்த்தகம் ஏற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும். அமெரிக்கா, ஐரோப்பா, சீனா  உள்ளிட்ட நாடுகள் தங்களது முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களை இந்த வாரம் வெளியிட உள்ளன. 

அமெரிக்க பெடரல் வங்கி

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்கபெடரல் வங்கியின் வெளிசந்தை கூட்டத்தின் மினிட்ஸ் மே 24ம் தேதி வெளியாக உள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் 31.4 லட்சம் கோடி கடன் உச்சவரம்பை உயர்ததுவது  தொடர்பான நிலவரம் உள்ளிட்டவை பங்கு சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுதவிர,  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு,  சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வு, தாழ்வை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.