வர்த்தக துளிகள்... கடந்த 2 வாரங்களில் கோதுமை விலை 4 சதவீதத்துக்கு மேல் உயர்வு

நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களில் கோதுமை விலை 4 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது அசாதாரண நிகழ்வு என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் பொதுவாக ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான அறுவடை காலத்தில் புதிய சாகுபடி சப்ளையை அதிகரிக்கும் அதனால் விலை கட்டுபாடாக இருக்கும் என்று தெரிவித்தனர். விவசாயிகள் கோதுமையை கையிருப்பில் வைத்திருப்பது விலை உயர்வுக்கான சாத்தியமான காரணங்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் எல்.ஐ.சி. நிறுவனம் ஒரு பெரிய பங்கு சந்தை முதலீட்டாளரும் கூட. எல்.ஐ.சி. நிறுவனம் பல்லேறு நிறுவன பங்குகளில் சுமார் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது. எல்.ஐ.சி. நிறுவனம் வசம் ஐ.டி.சி.யின் 189.68 கோடி பங்குகள் உள்ளது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் டிவிடெண்ட் வாயிலாக எல்.ஐ.சி.க்கு ரூ.2,940 கோடி கிடைத்துள்ளது.
சர்வதேச தரகு நிறுவனம் ஒன்றின் மதிப்பீட்டின்படி, 2025-26ம் நிதியாண்டுக்குள் நம் நாட்டில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவமான ரிலையன்ஸ் ஜியோவின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டும். மேலும் ரிலையன்ஸ் ஜியோவின் வருவாய் சந்தை பங்கு 47 சதவீதமாக அதிகரிக்கும். 2023 மார்ச் காலாண்டில் ஜியோ நிறுவனம் புதிதாக 64 லட்சம் மொபைல் இணைப்புகளை வழங்கியுள்ளது. கடந்த மார்ச் இறுதி நிலவரப்படி, ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 43.93 கோடியாக இருந்தது.
இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த மே 12ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 355 கோடி டாலர் உயர்ந்து கடந்த ஒராண்டில் இல்லாத அளவுக்கு 59,953 கோடி டாலராக அதிகரித்துள்ளது என இந்திய ரிசர்ச் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மே 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு 59,598 கோடி டாலராக இருந்தது. 2021 அக்டோபரில் அன்னிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 64,500 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது.