வர்த்தக துளிகள்.. ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் வரிக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் புகார் அளிக்க இந்தியா திட்டம்

 
வரி

ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வரும் அக்டோபர் 1 முதல் கார்பன் பார்டர் அட்ஜட்மென்ட் மெக்கானிசத்தை (CBAM) அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய வழிமுறையானது 2026 ஜனவரி 1 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இறக்குமதி செய்யப்படும் அதிக கார்பன் பொருட்கள் மீது 20 முதல் 35 சதவீதம் வரியாக விதிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கை, அங்கு இரும்பு, எஃகு மற்றும் சிமெண்ட் போன்ற அதிக கார்பன் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்வதில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே  ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்பன் வரிக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் புகார் அளிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

எல்.ஐ.சி.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி. நிறுவன பங்கு இப்போது (கடந்த செவ்வாய்கிழமை நிலவரப்படி) அதன் ஐ.பி.ஓ. வெளியீட்டு விலையை காட்டிலும் சுமார் 35 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஒராண்டில் எல்.ஐ.சி. நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1.90 லட்சம் கோடி சரிவடைந்துள்ளது. காப்பீட்டு துறையில் முன்னணி நிறுவனம், நிதிநிலை முடிவுகள் சிறப்பு போன்ற அம்சங்கள் இருந்தாலும் எல்.ஐ.சி. பங்கு எழுச்சி காணவில்லை.

வேகன்ஆர்

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது ஹேட்ச்பேக் வேகன்ஆர் கார் விற்பனையில்  20 ஆண்டுகளில் 30 லட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 1999ம் ஆண்டு இந்திய சந்தையில் வேகன்ஆர் காரை மாருதி சுசுகி அறிமுகம் செய்தது. 2008ல் வேகன்ஆர் விற்பனை 5 லட்சத்தை எட்டியது. 2027ல் 20 லட்சம், 2021ல் 25 லட்சம், 2023ல் 30 லட்சம் மைல்கல்லை தாண்டியது என்று மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.

பணம்

2024-25ம் நிதியாண்டுக்குள் காப்பீட்டு துறையின் மொத்த நேரடி பிரீமியம் வருவாய் ரூ.3 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கும். கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டில் காப்பீட்டு துறையின் மொத்த நேரடி பிரீமியம் வருவாய் ரூ.2.4 லட்சம் கோடியாக இருந்தது என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.