இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

 
பங்கு வர்த்தகம்

கச்சா எண்ணெய் விலை, மொத்த விலை பணவீக்கம், நிறுவனங்களின் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாத மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் இன்று வெளியாகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.70 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே அந்த மாதத்தில் மொத்த விலை பணவீக்கமும் குறைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஐ.டி.சி., இந்தியன் ஆயில், என்.டி.பி.சி., பேங்க் ஆஃப் பரோடா, பார்தி ஏர்டெல் மற்றும் எஸ்.பி.ஐ. உள்பட சுமார் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வாரம் தங்களது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிடுகின்றன.

பணவீக்கம்

அமெரிக்கா மற்றும் சீனாவின் பொருளாதாரம் குறித்த கவலைகள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 3வது வாரமாக கடந்த வாரமும் குறைந்தது. கச்சா எண்ணெய் விலை குறைவது இந்தியா போன்ற எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு சாதகமான அம்சமாகும். இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் தற்போது அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த மாதத்தில் இதுவரை அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.13,278 கோடிக்கு இந்திய நிறுவன பங்குகளை வாங்கியுள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் கடந்த வாரம் ரூ.1,262 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

பார்தி ஏர்டெல்

அமெரிக்கா, ஐரோப்பா, சீனா  உள்ளிட்ட நாடுகள் தங்களது முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களை இந்த வாரம் வெளியிட உள்ளன. இதுதவிர,  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு,  சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வு, தாழ்வை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.