வர்த்தக துளிகள்.. சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் ரூ.3.47 லட்சம் கோடிக்கு வீடுகள் விற்பனை

 
அடுக்குமாடி குடியிருப்பு

ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் அனாரோக் அறிக்கையின்படி, கடந்த 2022-23ம் நிதியாண்டில் டெல்லி என்.சி.ஆர்., மும்பை, புனே, பெங்களூரு,  ஹைதராபாத், சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நாட்டின் முக்கிய 7 நகரங்களில் மொத்தம் ரூ.3.47 லட்சம் கோடிக்கு வீடுகள் விற்பனையாகி உள்ளது. இது முந்தைய 2021-22ம் நிதியாண்டைக் காட்டிலும் 48 சதவீதம் அதிகமாகும். அந்த நிதியாண்டில் ரூ.2.35 லட்சம் கோடிக்கு வீடுகள் விற்பனையாகி இருந்தது.

நெதர்லாந்துி-இந்தியா

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2022-23ம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அடுத்தப்படியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி இடமாக நெதர்லாந்து உருவெடுத்துள்ளது. 2021-22ம் நிதியாண்டில்  நெதர்லாந்துடனான வர்த்தகத்தில் இந்தியாவின் வர்த்தக உபரி 800 கோடி டாலராக இருந்தது. இது, 2022-23ம் நிதியாண்டில் 1,300 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

ஷூ தயாரிப்பு நிறுவனம்

நைக் மற்றும் அடிடாஸ் போன்ற பிராண்டுகளுக்கான  வியட்நாமின் மிகப்பெரிய ஷூ உற்பத்தியாளரான போ யுன் வியட்நாம் நிறுவனம், ஆர்டர்களின் சரிவை காரணம் காட்டி  அடுத்த மாத இறுதியில் சுமார் 6 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது 1996ல் ஹோ சி மின் நகரில் இந்நிறுவனம் செயல்பட தொடங்கியதிலிருந்து மிகப்பெரிய பணிநீக்கம் என்று தகவல்.

ஜியோ சினிமா

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனத்தின் ஓ.டி.டி. இயங்குதளமான ஜியோ சினிமா ஒரு பிரீமியம் சந்தா சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதனால் ஜியோ சினிமா செயலியில் உள்ள அனைத்தும் இனி இலவசமாக கிடைக்காது. பிரீமியம் சந்தாவுக்கு ஜியோ சினிமா ஒரு ஆண்டுக்கு ரூ.999 வசூலிக்கும்.