வர்த்தக துளிகள்.. கனரா வங்கிக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்த இந்திய ரிசர்வ் வங்கி

 
கனரா வங்கி சேவை கட்டணத்தை குறைக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விதிமுறைகளை மீறிய பொதுத்துறை வங்கியான கனரா வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கிக்கு அபராதம் விதித்துள்ளது. வட்டி விகிதங்களை வெளிப்புற அளவுகோலுடன் இணைப்பது, தகுதியற்ற நிறுவனங்களுக்கு சேமிப்பு கணக்கு திறந்தது உள்பட பல்வேறு விதிமுறைகளை மீறியதற்காக கனரா வங்கிக்கு ரூ.2.92 கோடி இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

பணவீக்கம்

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் பேட்டி ஒன்றில், கடந்த ஏப்ரல் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 4.7 சதவீதமாக குறைந்திருப்பது மிகவும் திருப்திகரமாக உள்ளது. நிதிக்கொள்கை சரியான பாதையில் செல்வதை இது காட்டுகிறது. நடப்பு 2023-24ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என்று மிகவும் நம்பிக்கை மற்றும் மிகவும் உறுதியுடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

வாகனங்கள்

 நம் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரு சக்கர வாகனங்கள் (ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்) விற்பனை 15.1 சதவீதம் அதிகரித்து 13.38 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் 42,885 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது இரு மடங்குக்கும் அதிகமான வளர்ச்சியாகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 12.9 சதவீதம் உயர்ந்து 3.31 லட்சமாக அதிகரித்துள்ளது என்று இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அன்னிய செலாவணி

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த மே 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 720  கோடி டாலர் உயர்ந்து 59,598 கோடி டாலராக அதிகரித்துள்ளது என இந்திய ரிசர்ச் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 28ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு 58,878 கோடி டாலராக இருந்தது.  2021 அக்டோபரில் அன்னிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 64,500 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது.