பங்குச் சந்தைகளில் தொடரும் ஏற்றம்.. சென்செக்ஸ் 124 புள்ளிகள் உயர்வு..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 124 புள்ளிகள் அதிகரித்தது.

அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகித உயர்வு நடவடிக்கை தீவிரமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அந்நாட்டு மைய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் கூறியது சர்வதேச பங்குச் சந்தைகளில் சரிவை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இருப்பினும், இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் டெக் மகிந்திரா உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

வட்டி வருவாய் அமோகம்.. இண்டஸ்இந்த் வங்கி லாபம் 190 சதவீதம் வளர்ச்சி..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,954  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,517  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 125 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.266.26 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.80 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ்123.63 புள்ளிகள் உயர்ந்து 60,348.09 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 42.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,754.40 புள்ளிகளில் முடிவுற்றது.