வர்த்தக துளிகள்.. யுபி.ஐ. வாயிலாக பணம் செலுத்துதல் அதிவேக வளர்ச்சி- ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்..

 
யு.பி.ஐ.

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் கூறுகையில், இந்தியாவில் கடந்த 12 மாதங்களில் யுபிஐ வாயிலான பண பரிவர்த்தனை அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. தினசரி யுபிஐ வாயிலான பண பரிவர்த்தனை ரூ.36 கோடியை தாண்டியுள்ளது. இது 2022 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 50 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் தினசரி யுபிஐ வாயிலான பண பரிமாற்றம் ரூ.24 கோடியாக இருந்தது என தெரிவித்தார்.

5ஜி

நம் நாட்டில் 2022 அக்டோபரில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை அறிமுகம் செய்யப்பட்டது.  பார்தி ஏர்டெல் நிறுவனம்  நாடு முழுவதும் 5ஜி சேவையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் 125க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளதாகவும், இதனையடுத்து நாட்டில் தற்போது 265க்கும் அதிகமான நகரங்களில்  வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை கிடைக்கும் என பார்தி ஏர்டெல் தெரிவித்துள்ளது.

மீண்டும் ஒரே மாதத்தில் 1 லட்சம் கார்களை விற்பனை விற்பனை செய்த மாருதி சுசுகி இந்தியா..

கடந்த பிப்ரவரி மாத கார் விற்பனையில்  மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஆகிய நிறுவனங்களின் சந்தை பங்கு குறைந்துள்ளது. அதேசமயம், டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் கியா இந்தியா நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் சந்தை பங்கு 42.36 சதவீதத்தில் இருந்து 41.40 சதவீதமாக குறைந்துள்ளது. டாடா மோட்டார்ஸின் சந்தை பங்கு 13.16 சதவீதத்தில் இருந்து 13.57 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதானி

ஹிண்டன்பர்க் அறிக்கையின் எதிரொலியாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டும் பெறுவதற்கு கடனை குறைப்பதில் அதானி குழுமம் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று அதானி குழுமம் ரூ.7,374 கோடி பங்கு சார்ந்த கடனை முன்கூட்டியே செலுத்தியுள்ளது. அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்கு சார்ந்த கடனை குறைப்பது என்ற புரோமோட்டர்ஸின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக பங்கு சார்ந்த கடனை முன்கூட்டியே செலுத்தியுள்ளது.