வர்த்தக துளிகள்.. தெலங்கானாவில் உற்பத்தி ஆலையை தொடங்கும் பாக்ஸ்கான் நிறுவனம்

 
பாக்ஸ்கான்

தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கொங்கரா கலான் என்ற கிராமத்தில் தைவானை  சேர்ந்த கான்டாக்ட் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் டெக்னாலஜிஸ் குழுமம் தனது உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது என்று தெலங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையால் அங்கு வேலை உருவாக்கம் மற்றும் வலுவான வருவாய் உருவாக்கம் ஏற்படும்.

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்துள்ளது. பேங்க் ஆஃப் பரோடா வங்கி வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் (ஆண்டுக்கு) 0.40 சதவீதம் குறைத்து ரூ.8.5 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது. மேலும் குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான கடனுக்கான வட்டி விகிதத்தை பேங்க் ஆஃப் பரோடா குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் மார்ச் 5ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், இம்மாதம் 31ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் பேங்க் ஆஃப் பரோடா வங்கி தெரிவித்துள்ளது.

வாகனங்கள்

2022 பிப்ரவரி மாதத்தில் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில்  இரு சக்கர வாகனம், கார் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்பட மொத்தம் 17.75 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2022 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 16 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் மொத்தம் 15.31 லட்சம் வாகனங்கள் பதிவாகி இருந்தது என வாகன டீலர்கள் அமைப்பான எஃப்.ஏ.டி.ஏ. தெரிவித்துள்ளது.

மெகேலா சடோர்

அசாமில் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் மெகேலா சடோர் மற்றும் கமுசா (ஆடை) விற்பனைக்கு அ்ம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனால் சூரத்தில் உள்ள விசைத்தறி நெசவாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலத்துக்கு மெகேலா சடோர் மற்றும் கமுசா சப்ளை செய்யும் முக்கிய சப்ளையராக சூரத் உள்ளது.  அசாம் அரசின் இந்த தடையால் தங்களது உற்பத்தி தேங்கும் மற்றும் வருவாய் பாதிக்கும் என்பதால் சூரத்  விசைத்தறி நெசவாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.