இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

 
பங்கு வர்த்தகம்

அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவுல் அறிக்கை, ஜனவரி மாத தொழில்துறை உற்பத்தி  உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.


அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் வரும் 7ம்  தேதியன்று பொருளாதார கண்ணோட்டம் மற்றும் நிதிக் கொள்கை நடவடிக்கைகள் குறித்து செனட் வங்கி குழுவின் முன் பேசுவார்  மேலும் மத்திய வங்கியின் அரையாண்டு நிதிக் கொள்கை அறிக்கையை முன்வைப்பார். மார்ச் 8ம் தேதியன்று ஹவுஸ் நிதி சேவை குழுவின் முன் இதே விஷயம் குறித்து ஜெரோல் பவல் வாக்குமூலம் அளிப்பார். அதை தொடர்ந்து ஒர கேள்வி பதில் அமர்வு நடைபெறும். சர்வதேச அளவில் இது முதலீட்டாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும். ஜெரோம் பவலின் வாக்குமூலத்தில் பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு நடவடிக்கையின் வேகம் மற்றும் திசை மற்றும் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் பற்றிய குறிப்பை அனைத்து தரப்பினரும் ஆவலாக எதிர்பார்ப்பார்கள்.

அமெரிக்க பெடரல் வங்கி

கடந்த ஜனவரி மாத  தொழில்துறை உற்பத்தி, பிப்ரவரி 24ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வாரங்களில் வங்கிகள் திரட்டிய டெபாசிட் மற்றும் வழங்கிய கடன் குறித்த புள்ளிவிவரம் மற்றும் மார்ச் 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் ரிசர்வ் வங்கி கைவசம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பு குறித்த புள்ளிவிவரங்கள் வரும் 10ம்  தேதி வெளிவருகிறது. அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த வார இறுதியில் இந்திய பங்குகளில் மீண்டும் அதிகளவில் முதலீடு செய்தனர். இருப்பினும் அது நீடித்தால் மட்டுமே பங்கு வர்ததகத்தின் ஏற்றத்துக்கு உறுதுணையாக அமையும். 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு

அதானி குழும நிறுவன பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதானி குழுமம் தொடர்பாக ஏதேனும் செய்திகள் வெளியே வந்தால் அவற்றை முதலீட்டாளர்கள் கண்காணிப்பாளர்கள். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களது முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களை இந்த வாரம் வெளியிட உள்ளன. இதுதவிர,  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை,  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, அமெரிகக் சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வு, தாழ்வை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.