வர்த்தக துளிகள்.. மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தியாவின் தனிநபர் வருமானம் இரண்டு மடங்கு அதிகரிப்பு..

 
பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த 2014-15ல் இருந்து பெயரளவு அடிப்படையில் இந்தியாவின் தனிநபர் வருமானம் இரு மடங்கு அதிகரித்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகத்தின அறிக்கையின்படி, 2022-23ம் நிதியாண்டில் இந்தியாவின் தனிநபர் வருமானம் ரூ.1,72,00ஆக உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. 2014-15ல் தனிநபர் வருமான ரூ.86,647ஆக இருந்தது.

அதானி

அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் அதானி குழுமம் பல ஆண்டுகளாக முறைகேடான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடி திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சாட்டியது. இதனால் அதானி குழும நிறுவன பங்குகளின் விலை கடும் வீழ்ச்சி கண்டது. இந்நிலையில், அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ஜி.கியூ.ஜி. அதானி குழும நிறுவனங்களில் சுமார் 200 கோடி டாலர் முதலீடு செய்தது. இந்த தகவல் வெளியானதையடுத்து, அதானி குழும நிறுவன பங்குகள் விலை உயர தொடங்கியது. கடந்த 4 வர்த்தக தினங்களில் அதானி குழுமத்தை சேர்ந்த 10 நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1.73 லட்சம் கோடி உயர்ந்து ரூ.8.55 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

நேரடி பண பரிமாற்றம்

பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அஜய் சேத் கூறுகையில், அரசு திட்டங்களின் பயனாளிகளுக்கு நேரடி பணப்பரிமாற்றம் திட்டத்தின்படி, பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படுவதால் மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் 2,700 கோடி டாலர் சேமிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நேரடி பணப் பரிமாற்றம் விரைவானது மற்றும் ஊழலை நீக்குகிறது என தெரிவித்தார்.

 ASG Eye Hospitals

ராஜஸ்தானை  தலைமையிடமாக கொண்டு செயல்படும் ASG Eye Hospitals, தமிழகத்தை சேர்ந்த பிரபலமான கண் மருத்துவமனையான வாசன் ஐ கேர் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. இணைப்பிற்கு பிறகும்  வாசன் ஐ கேர் (Vasan Eye Care) ஒரு சுயாதீனமாக கண் பராமரிப்பு பிராண்டாக இருக்கும் என்று ASG Eye Hospitals தெரிவித்துள்ளது. வாசன் ஐ கேர் நிறுவனத்தை ரூ.526 கோடிக்கு ASG Eye Hospitals கையகப்படுத்தியுள்ளதாக தகவல்.