வர்த்தக துளிகள்.. பயணிகள் வாகன உற்பத்தியில் புதிய மைல்கல்லை தாண்டிய டாடா மோட்டார்ஸ்

 
டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் பயணிகள் வாகன உற்பத்தியில்  50 லட்சம் யூனிட்கள் என்னும் புதிய மைல்கல்லை கடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.  டாடா மோட்டார்ஸ் வாகன உற்பத்தியில் 2004ல் 10 லட்சம் யூனிட்கள் மைல்கல்லையும் , 2010ல் 20 லட்சம் மைல்கல்லையும் எட்டியது. 2015ல் 30 லட்சத்தையும், 2020ல் 40 லட்சத்தையும் தாண்டியது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள்  10 லட்சம் கார்களை உற்பத்தி செய்து தற்போது 50 லட்சம் யூனிட்கள் என்ற சாதனை மைல்கல்லை தாண்டியுள்ளது.

அன்னிய செலாவணி

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு பிப்ரவரி 24ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 32.5  கோடி டாலர் குறைந்து 56,094 கோடி டாலராக அதிகரித்துள்ளது என இந்திய ரிசர்ச் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு 56,127  கோடி டாலராக இருந்தது.  2021 அக்டோபரில் அன்னிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 64,500 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 6.6 கோடி டாலர் குறைந்து 4,175 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

வீடு

தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் மற்றும் E&Y ஆகியவற்றின் கூட்டு அறிக்கையின்படி, 2030ல் இந்திய ரியல் எஸ்டேட் துறையின் சந்தை மதிப்பு 1 லட்சம் கோடி டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021ம் ஆண்டில் இந்த துறை 20,000 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டு இருந்தது. அடுத்த 7 ஆண்டுகளில் இத்துறையின் சந்தை மதிப்பு 1 லட்சம் கோடி டாலர் மதிப்பிற்கு நகரும். 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரியல் எஸ்டேட் துறையின் பங்களிப்பு 18 முதல் 20 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி,இறக்குமதி

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், உலக பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் இந்தியாவின் சரக்குகள் மற்றும் சேவைகளின் மொத்த  ஏற்றுமதி இந்த நிதியாண்டில் 75,000 கோடி டாலரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021-22ம் நிதியாண்டில் நாட்டின் சரக்குகள் (42,200 கோடி டாலர்) மற்றும் சேவைகள் (25,400 கோடி டாலர்) மொத்தம் 67,600 கோடி டாலருக்கு ஏற்றுமதியாகி இருந்தது என தெரிவித்தார்.