அதானி குழுமத்தில் அமெரிக்க நிறுவனம் முதலீடு... சென்செக்ஸ் 900 புள்ளிகள் அதிகரிப்பு..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ஜி.கியூ.ஜி. அதானி குழும நிறுவனங்களில் சுமார் 200 கோடி டாலர் முதலீடு செய்தது, அமெரிக்க பெடரல் வங்கி அஞ்சும் அளவுக்கு பணவீக்க எதிர்ப்பு போராட்டத்தை முடுக்கி விடாது என்ற நம்பிக்கையை பெடரல் வங்கியின் அதிகாரி தெரிவித்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை  உயர்ந்தது. அதேவேளையில், டெக் மகிந்திரா மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 5 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

அதானி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,183  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,331  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 125 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.263.40 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.47 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 899.62 புள்ளிகள் உயர்ந்து 59,808.97 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 272.45 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,594.35 புள்ளிகளில் முடிவுற்றது.